என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டெல்லி ஐகோர்ட்டு"
கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டம், 2015-ம் ஆண்டு ஜூலை 1 முதல், முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வக்கீல் கவுதம் கெய்தான் மீது கருப்பு பண ஒழிப்பு சட்ட வழக்கு பாய்ந்தது.
இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கவுதம் கெய்தான் மனு தாக்கல் செய்தார். கருப்பு பண ஒழிப்பு சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தியதை அனுமதிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கெய்தான் மீதான நடவடிக்கைக்கும் இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. அம்மனு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவு, இதுபோன்ற மற்ற வழக்குகளையும் பாதிக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். கவுதம் கெய்தானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு, 2 ‘ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு.
இதில் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்தன.
அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்த சட்ட விரோத பணபரிமாற்ற தடை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா, கரீம் மொரானி, பி.அமிர்தம், சரத்குமார் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து டெல்லி தனிக்கோர்ட்டு 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
இதே போன்று சி.பி.ஐ. தொடுத்த ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை அதே நாளில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விடுதலை செய்தது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி மேல்முறையீடு செய்தது.
அதைத் தொடர்ந்து மறுநாளில், ஊழல் வழக்கில் தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.
அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரித்து வருகிறார்.
இதில் சுவான் டெலிகாம் நிறுவனத்தின் நிறுவனர் சாகித் பல்வா, குசேகான் பழம், காய்கறி நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால் மற்றும் டைனமிக் ரியால்டி நிறுவனம், டி.பி. ரியால்டி நிறுவனம், நிகார் கட்டுமான நிறுவனம் ஆகியோர் பதில் மனுதாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டனர். அப்போது அவர்களுக்கு மேலும் அவகாசம் வழங்கிய நீதிபதி நஜ்மி வாஜிரி, அவர்கள் ஒவ்வொருவரும் தெற்கு டெல்லி பகுதியில் தலா 3 ஆயிரம் மரம் நடுமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பாக சாகித் பல்வாவும், ராஜீவ் அகர்வாலும் நேரிலும், பிற 3 நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளும் சம்மந்தப்பட்ட வன அதிகாரி முன் வரும் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 26-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #2GCase #DelhiHighCourt #TreePlant
டெல்லியில் 2014-ம் ஆண்டு, மத்திய ஆயுதப்படை போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் சந்தீப் யாதவ். இவர் சிறப்பாக பணியாற்றியதற்காக 2010-ம் ஆண்டு ஜனாதிபதி பதக்கம் பெற்றவர் ஆவார்.
இந்த நிலையில் இவர் திருமணமான ஒரு பெண்ணுக்கு செல்போன் வழியாக தனது நிர்வாண படத்தை அனுப்பி வைத்ததுடன், தொலைபேசியில் தொடர்ந்து ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் புகார் செய்தார். அதன்பேரில் துறை ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பது கண்டறியப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை நீதிபதிகள் எஸ். முரளிதர், சஞ்சீவ நருலா ஆகியோர் விசாரித்தனர். விசாரணை முடிவில், பணி நீக்கம் செய்யப்பட்ட சந்தீப் யாதவுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்க நீதிபதிகள் மறுத்து உத்தரவிட்டனர். இதனால் அவர் மீண்டும் பணியில் சேர முடியாது.
இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “பொது ஊழியர் ஒருவர் உயர்ந்த நிலையில் இருக்கிறபோது, உயர்ந்த நெறிமுறையை பராமரிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. #DelhiHighCourt #CRPF #CRPFDIG #SandeepYadav
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி அவரது சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.
டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள திரிலோக்புரியில் நடந்த கலவரத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.
இது தொடர்பாக 1984-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதி 107 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 88 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 88 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது 22 ஆண்டு காலமாக விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.கே.குப்தா செசன்ஸ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து நேற்று உத்தரவிட்டார். இதன் மூலம் 88 பேரின் 5 ஆண்டுகால சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
எனினும் குற்றவாளிகளில் பலர் விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.#DelhiHighCourt #AntiSikhRiot
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம், மீரட் பகுதியில் 1987-ம் ஆண்டு இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் நடந்தது. அப்போது அங்குள்ள ஹாசிம்பூரா பகுதியை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினர் 42 பேர், போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள், கால்வாயில் வீசப்பட்டன. இது ஹாசிம்பூரா படுகொலை என அழைக்கப்படுகிறது.இது தொடர்பாக 19 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கை டெல்லி திஸ்கஸாரி கோர்ட்டு விசாரித்தது. 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் விசாரணை காலத்தில் இறந்து விட்டார்.
முடிவில் 16 பேர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, விடுதலை செய்து 2015-ம் ஆண்டு அந்த கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு விசாரித்தது. கடந்த மாதம் 6-ந் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தும், அங்கு விடுதலை செய்யப்பட்ட 16 போலீசாருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து 16 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட போலீசார் அனைவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டனர்.
டெல்லியைச் சேர்ந்த பூஜா மகாஜன் என்பவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அங்குள்ள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, அரசின் பொருளாதார கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு கூறிவிட்டது.
இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை எந்த அடிப்படையில் தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை வெளியிடுமாறும், அவற்றை அத்தியாவசிய பொருட்களாக கருதி நியாயமான விலையை நிர்ணயிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பூஜா மகாஜன் மற்றொரு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் கமிஷன் வழங்கிய உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா டிங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சார்பில் செம்மலை தரப்பு வக்கீல் ஆஜர் ஆனார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை இன்று(வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் டெல்லி ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. #AIADMK #DelhiHighCourt
பெட்ரோல், டீசல் ஆகிய அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட அடிப்படையில் உயர்த்தியோ, குறைத்தோ வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஐகோர்ட்டில் பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் “பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்துவதால், நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன. கர்நாடக சட்டசபை தேர்தலின்போது 22 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலையை நிர்ணயிக்க உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீது இன்று(புதன்கிழமை) விசாரணை நடக்கிறது. #PetrolDieselPriceHike #DelhiHighCourt
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பிலான வாதம் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலான வாதம் இன்னும் நிறைவடையவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தவிர்க்க இயலாத காரணங்களால் விசாரணை நடைபெறவில்லை என்றும், வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் தொடங்கியது. அவர்களின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தின் போது கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் முறையாக பொதுக்குழு கூட்டப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவின் அடிப்படையில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. இதனையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.
குறிப்பாக 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் 1741 பேர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுமார் 10 சதவிகிதம் மட்டுமே எதிராக வாக்களித்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டது.
எனவே, காரண காரியங்களை ஆராய்ந்து பெரும்பான்மை அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்கி உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இந்த வழக்கு நடைபெற்ற போது சசிகலா தரப்பினர், ‘பெரும்பான்மை அடிப்படையிலேயே இந்த வழக்கை அணுக வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துவிட்டு, தற்போது அதனை எதிர்த்து வாதாடுவது எந்த வகையில் நியாயம்?
மேலும் தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால் 90 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது இதுபோன்ற குறுக்கு விசாரணையால் என்ன பயன் இருக்க முடியும்?
இவ்வாறு முகுல் ரோத்தகி வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
டி.டி.வி.தினகரன் தரப்பில் கோர்ட்டில் நேற்று ஆஜரான அவருடைய வக்கீல் மீனாட்சி அரோரா தன்னுடைய வாதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற வழக்கு தேர்தல் கமிஷனில் நடைபெற்று வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்களில் பல போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக அவர்கள் மீது தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் கமிஷனின் இந்த அணுகுமுறை சட்டவிரோதமானது என்றார். 7 நாட்கள் நடந்த இவர்களின் வாதம் நிறைவடைந்தது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தன்னுடைய வாதத்தை தொடங்கினார். வாதம் தொடங்கிய சிறிது நேரத்தில், இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து வாதம் நடைபெறும் என்று கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
வழக்கு விசாரணையின் போது அமைச்சர் சி.வி.சண்முகம் கோர்ட்டில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து விசாரணையை கவனித்து கொண்டிருந்தார்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முதன்மையாக குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருடைய ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு கோரியதை ஏற்று, அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பதிவு மீதான இறுதி வாதம் ஜூலை 17-ந் தேதி என்று அறிவித்த நீதிபதி, அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். #TwoLeavesSymbol #DelhiHighCourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்